பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய இந்தியா முயற்சித்து வருவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்துறை சார்பில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், பாதுகாப்பு துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க, நடப்பு ஆண்டில் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய 75 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர முயற்சிகளால் நீர்மூழ்கி கப்பல், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் உள்நாட்டில் சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த நிதியாண்டில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. நாம் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடு தான் முதன்மை என்ற ஒரு நிலைப்பாட்டில் நிற்க வேண்டும். அப்போது தான் தற்சார்பு நிலையை நாம் அடைய முடியும் என்று அவர் கூறினார்.