கடந்த 2022 ஆம் ஆண்டின் வாகன விற்பனை அடிப்படையில், ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையாக முன்னேறி உள்ளது. 2022 ஆம் ஆண்டு, இந்தியாவின் மொத்த வாகன விற்பனை 4.25 மில்லியன் ஆகவும், ஜப்பானின் மொத்த வாகன விற்பனை 4.2 மில்லியன் ஆகவும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கடந்த மாத வாகன விற்பனையையும் கணக்கில் கொண்டால், இந்தியாவின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, உலக அளவில், சீனா வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது. சீனாவில் அந்த வருடம் 26.27 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் 15.4 மில்லியன் வாகன விற்பனையுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தையும், 4.4 மில்லியன் வாகன விற்பனையுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. இந்நிலையில், ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன், இந்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டால், இந்திய வாகனச் சந்தை 2060 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சீனாவை முந்தும் எனவும் கூறப்படுகிறது.














