சர்வதேச நாணய நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, ஜூலை மாத கணிப்பில் இருந்து, 60 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவித்துள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. எனினும், அதே வேளையில், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்தாலும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி, 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று கணித்தது. அதைப்போலவே, தற்போது, உலகளாவிய பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம், முந்தைய கணிப்பான 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக இந்திய பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ளது. அத்துடன், வரும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதமாக மேலும் குறையும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைத்து அறிவிக்கப்பட்டது போலவே, சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் சர்வதேச நாணய நிதியம் குறைத்து அறிவித்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில், இந்தியாவை விட, பொருளாதார வளர்ச்சியில், சீனா பின்தங்கி இருக்கும் என்று கணித்துள்ளது. அத்துடன், “உலகளாவிய பொருளாதார மந்த நிலை, பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் வரலாறு காணாத பணவீக்கம் உணரப்பட்டுள்ளது. எனவே நாணயக் கொள்கையில் பல அபாயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று சர்வதேச நாணய நிதியம், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, 2021 ஆம் ஆண்டில், 6 சதவீதமாக இருந்ததாகவும், அது 2022 ஆம் ஆண்டு 3.2 சதவீதமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், 2023 ஆம் ஆண்டில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக மேலும் குறையும் என்று கணித்துள்ளது. மேலும், 2001 ஆம் ஆண்டு முதல், இதுவே குறைவான வளர்ச்சி விகிதம் என்று நாணய நிதியம் அறிக்கையில் பதிவிட்டுள்ளது. உலகளாவிய பணவீக்கத்தை பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டு, 4.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், 2022 ஆம் ஆண்டில் 8.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், வரும் ஆண்டுகளில், பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று கணித்துள்ளது. வரும் 2023ம் ஆண்டு, 6.5% ஆகவும், 2024 ஆம் ஆண்டு 4.1 சதவீதமாகவும் பணவீக்கம் குறையும் என்று கணித்துள்ளது. மேலும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.