பாகிஸ்தானில் இந்தியாவின் நடவடிக்கைகளால் உணவுப் பற்றாக்குறைக்கு வாய்ப்பு
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பலத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு, இந்தியாவில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை நாடு கடந்தும் உள்ளது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகச் செயல்பாடுகளையும் நிறுத்தி விட்டது. ஆனால், பாகிஸ்தான் தனது மருந்து தயாரிப்பில் பயன்படும் மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போதைய வர்த்தகத் தடை காரணமாக, அந்த நாட்டில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது. இதனால், அவசர நிவாரண நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்திய நடவடிக்கைகள் மேலும் கடுமையாகலாம் என்ற அச்சத்தில், எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள 13 தொகுதிகளில் உள்ள மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை முன்னறிவிப்பு நடவடிக்கையாக சேமிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.














