ந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழில் முனைவோரான விவேக் ராமசாமி என்பவர், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டிரம்ப், விருப்ப மனு அளித்துள்ள நிலையில் அதே கட்சியை சேர்ந்த நிக்கி ஹாலீ மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த இருவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.
விவேக் ராமசாமி, அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த இந்திய கேரள தம்பதிக்கு பிறந்தவர் ஆவார். இவர், அமெரிக்காவில், சுகாதாரத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த பல நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வருகிறார். குடியரசு கட்சியை சேர்ந்த அவர், தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில், தான் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான தெரிவு பட்டியலில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், குடியரசு கட்சி சார்பாக யார் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பதை காத்திருந்து அறிய வேண்டும்.