பொதுவாக, இந்தியாவைச் சேர்ந்த செல்வந்தர்கள் மற்றும் சில நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் நிதியை வைப்பு வைத்திருப்பார்கள். இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த வங்கிகளில் இந்தியர்களின் மொத்த இருப்பு நிதி 70% வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் மொத்த நிதி 104 கோடி சுவிஸ் பிராங்க் ஆகும். இந்திய மதிப்பில் இது 9758 கோடி ரூபாய் ஆகும். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் நிதி குறைந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி மதிப்பு 383 கோடி சுவிஸ் பிராங்க் அளவில் 14 ஆண்டுகால உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு, தொடர்ச்சியாக இந்தியர்களின் நிதி முதலீடு சரிந்து வருகிறது. சுவிட்சர்லாந்து மத்திய வங்கி இது தொடர்பான புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.