இன்றைய தினம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.22 ஆக இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 82 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை என்பதால், இது வரலாற்றுப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தை விட, மேலும் 16 காசுகள் குறைந்து, இன்று காலை 11:30 மணியளவில் 82.38 ஆக இந்திய ரூபாயின் மதிப்பு பதிவானது. இது வரலாற்றுச் சரிவு ஆகும். இந்த வருடத்தின் தொடக்கம் முதல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் 10.6% சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஃபெடரேசனின் அறிவிப்புகளால் இது நேர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும், வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் உள்நாட்டு பங்குகளின் முடக்கம் போன்றவற்றின் காரணமாகவும் இந்திய ரூபாயின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
வியாழன் அன்று சிகாகோவின் ஃபெடரேஷன் தலைவர் சார்லஸ் இவான்ஸ், ஃபெடரேஷனின் பாலிசி விகிதம் 4.5 முதல் 4.75 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று தெரிவித்தார். இதனால் அமெரிக்காவின் பணவீக்கம் சற்று குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றுச் சரிவை பதிவு செய்துள்ளது. மேலும், இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த டாலர் குறியீட்டு எண், தற்போது 112 ஐ தாண்டி உள்ளது. இதற்கிடையில் பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான தரவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன. இது ரூபாய் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பில் மேலும் சரிவுகள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு 83, 84 புள்ளிகளைக் கடந்து செல்லலாம் என்று வல்லுநர்கள் கணித்துள்ளார்கள்.