இலங்கையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தம் இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இங்கு போதிய விமானங்கள் இல்லாததால் இது செயலற்று இருக்கிறது. இது சுமார் 1742 கோடி செலவில் கட்டப்பட்டது. அதில் 1583 கோடி சீனாவின் எக்ஸாம் வங்கி கடனாக அளித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்ததால் அதை நிர்வகிக்க இலங்கை அரசு நிறுவனங்களை தேடி வந்தது.
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் அந்நாட்டு அரசு செய்தி தொடர்பாளர் பந்துல குணவர்த்தன கூறியதாவது, மத்தள ராஜபட்ச விமான நிலையத்தை நிர்வகிக்க 5 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜன் மேனேஜ்மென்ட் நிறுவனம் மற்றும் இந்தியாவின் சவுரியா ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்க இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது குறித்து முடிவு எடுக்க ஆலோசனை குழு ஒன்றை இலங்கை அமைச்சரவை நியமித்திருந்தது. அதோடு இது தொடர்பாக இலங்கை விமான போக்குவரத்து துறை அளித்த ஆலோசனைக்கு பிறகு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.