அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கல்வி நிலையங்களில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சென்ற கார், எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்கு நேராக மோதி, இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாசசூசெட்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில், பிரேம்குமார் ரெட்டி (27), பவானி குள்ளபள்ளி (22), சாய் நரசிம்ம செட்டி (22) ஆகிய மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மனோஜ் ரெட்டி டோண்டா (23), ஸ்ரீதர் ரெட்டி சிந்தகுண்டா (22), விஜித் ரெட்டி கும்மாளா (23), ஹேமா ஐஸ்வர்யா சித்திரெட்டி (22) ஆகிய நான்கு இந்திய மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் Berkshire மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏழு பேரில், ஆறு பேர், நியூ ஹேவன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஒருவர் சாக்ரெட் ஹார்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார் என்று சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிரே வந்த மற்றொரு வாகனத்தை ஓட்டி வந்தவர், 46 வயதுடைய ஆர்மன்ட்டோ பாடிஸ்டா குரூஸ் ஆவார். அவர் Fairview மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.