பிரிட்டன் நாட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாட் வரி திருப்பி செலுத்துவதற்கு, போலியான ஏற்றுமதி ரசீதுகளை அவர் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், 97 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் மதிப்பில் ஜவுளி மற்றும் கைபேசிகள் ஏற்றுமதி செய்தது போல போலியாக அவர் ஆவணங்கள் அமைத்துள்ளார். இதற்காக, ஒரு கும்பலுடன் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, 55 வயதாகும் ஆரிஃப் பட்டேல், சாக்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் துபாயைச் சேர்ந்த முகமது ஜாஃபர் அலி உடன் இணைந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்களில் ஈடுபட்டு வந்துள்ளது நிரூபணம் ஆகி உள்ளது. இது பிரிட்டனின் மிகப்பெரிய வரி ஏய்ப்புகளில் ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. இவர்களது கும்பலைச் சேர்ந்த 26 பேர் இந்த குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.