இந்தியாவின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாக பருத்தி உள்ளது. இந்நிலையில், பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 19 வருட சரிவு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரலாற்று வீழ்ச்சியாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், இந்தியாவின் பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 14 வருட வீழ்ச்சியை பதிவு செய்தது. தொடர்ந்து சரிந்து வரும் பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, தற்போது 19 வருட வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி அமைப்பு இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டில் 42.5 லட்சம் பேல் அளவுக்கு இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி பதிவாகி இருந்தது. ஆனால், 2023 ஆம் நிதி ஆண்டில், 8 லட்சம் பேல் அளவில் மட்டுமே ஏற்றுமதி பதிவாகியுள்ளது. அதே வேளையில்,நடப்பு ஆண்டில், இந்தியாவின் பருத்தி உற்பத்தியும் 3.21 கோடி அளவில் மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், உலக அளவில் பருத்திக்கான தேவை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் இந்தியாவின் பருத்தி ஏற்றுமதியில் மிக முக்கிய சரிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.














