தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வருமான வரி ஆகியவற்றை இணைத்து இந்தியாவின் நேரடி வருமான வரி கணக்கிடப்படுகிறது. இந்நிலையில், அரசாங்கத் தரவுகளின் படி, கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் நேரடி வரி வசூல் 15.67 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 24.09% உயர்வாகும். மேலும், இந்த நேரடி வரி வசூலில் திருப்பி செலுத்த வேண்டிய தொகை 12.98 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 18.4% உயர்வாகும்.
ஒவ்வொரு முறையும் பட்ஜெட் அறிக்கையின் போது, நேரடி வரி வசூல் குறித்த கணிப்பு வெளியிடப்படும். அதன்படி, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் கணிப்பை விட, வரி வசூல் 91.39% உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பட்ஜெட் கணிப்பிற்கு பின்னர், திருத்தப்பட்ட கணிப்பு வெளியாகும். அதனுடன் ஒப்பிடுகையில், இது 78.65% உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்ப்பரேட் வருமான வரி வசூலில் 19.33% உயர்வும், தனிநபர் வருமான வரி வசூலில் 29.63% உயர்வும் பதிவாகியுள்ளது. சுமார் 2.69 லட்சம் கோடி மதிப்பில் திருப்பி செலுத்த வேண்டிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 61.58% உயர்வாகும். இவ்வாறு, அரசாங்கத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














