நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3% ஆக குறைந்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி 8.4% உயர்ந்திருந்தது. மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 13.5% ஜிடிபி வளர்ச்சி பதிவாகி இருந்தது. இந்நிலையில், கடந்த காலாண்டில், உற்பத்தி துறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவற்றின் மோசமான செயல்திறன் காரணமாக, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகளின் GVA 14.7% உயர்ந்துள்ளது. நிதித்துறை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்முறை சேவைகள் 7.2%, உற்பத்தி துறையில் 4.3%, சுரங்கத் துறையில் 11.7% மற்றும் கட்டுமான துறையில் 6.1% GVA பதிவாகியுள்ளது . இந்நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.