பிரபல வங்கி நிறுவனமான டியூட்சே, இந்தியாவின் பணவீக்கம் 6% ஆகவும், வாடிக்கையாளர் விலை குறியீட்டு எண் 6.9% ஆகவும் உயரும் என்று கணித்துள்ளது.
வாடிக்கையாளர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் குறித்த தரவுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், இது குறித்த கணிப்புகளை டியூட்சே வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலையில் சரிவு காணப்பட்டாலும், அதனால் சில்லறை வணிகத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்கள் இடையிலான காலகட்டத்தில், உணவு பொருட்கள் பணவீக்கம் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, காய்கறிகளின் விலை கடுமையாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணரான கௌஷிக் தாஸ் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வருடத்தில் தானிய சாகுபடி ஐந்து சதவீதம் குறைந்துள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் காரணமாக உணவுப் பொருட்கள் பணவீக்கம் ஏழு சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். அத்துடன், ஏற்கனவே வட்டி விகிதத்தை கூட்டியுள்ள மத்திய ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு நிறைவடைவதற்குள், வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். குறிப்பாக, 75 அடிப்படை புள்ளிகளில் இருந்து 85 அடிப்படை புள்ளிகளாக வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். இவ்வாறான காரணங்களால், இந்தியாவின் பணவீக்கம் 6% ஆகவும், சில்லறை பணவீக்கம் 6.9% ஆகவும் உயரும் என்று இந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.