கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 2 வருட குறைவான அளவை பதிவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 4.95% ஆக இருந்த மொத்த விலை பணவீக்கம், ஜனவரி மாதத்தில் 4.73% ஆக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மொத்த விலை பணவீக்கம் சரிந்துள்ளதால், பெரு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடையும் என்று கருதப்படுகிறது.
உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய், பெட்ரோல், எரிவாயு, ஜவுளி பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களின் விலைகள் குறைந்ததால் பணவீக்கம் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரு மாதங்களாக பணவீக்கம் சரிந்து வருவதால், மத்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை அதிகரிப்பதை பரிசீலனை செய்யும் என்று நம்பப்படுகிறது.
ஜனவரி மாதத்தில், மொத்த விலை அடிப்படையிலான உணவுப் பொருள் பணவீக்கம் 2.38% ஆக உயர்ந்துள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களுக்கான பணவீக்கம் 3.88% ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், எரிவாயு மற்றும் பெட்ரோலுக்கான பணவீக்கம் முந்தைய பதிவான 39.71% ல் இருந்து 23.79% ஆக குறைந்துள்ளது. மேலும், எரிசக்தி துறை மற்றும் உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம் முறையே 15.15% மற்றும் 2.99% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.