பயணிகள் விமானச் சேவை வழங்கும் நிறுவனமான இண்டிகோ, தனது முதல் சரக்கு விமானச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. A321 P2F என்ற பெயரில், பயணிகள் விமானம் தற்போது சரக்கு விமானமாக மாற்றப்பட்டுள்ளது. கிழக்கில் சீனாவில் இருந்து, மேற்கில் அரபு நாடுகள் வரை, இண்டிகோவின் சரக்கு விமானச் சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வரும் விமானிகள் மற்றும் பொறியாளர்களே சரக்கு விமானத்தின் செயல்பாடுகளிலும் பணியாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் விமானச் சேவை வழங்குவதில் இண்டிகோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக, 275 விமானங்கள், இந்தியாவின் 74 நகரங்களை இணைத்து, ஒரு நாளைக்கு 1600 பயணங்கள் மேற்கொள்கின்றன. அத்துடன், 26 சர்வதேசப் பயணச் சேவைகளையும் இண்டிகோ நிறுவனம் வழங்குகிறது. தற்போது, இந்த நிறுவனம் சரக்கு விமானச் சேவையில் கால் பதித்துள்ளது குறித்து நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி மகேஷ் மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.
"சரக்கு விமானச் சேவையின் மூலமாக நிறுவனத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கும். எனவே, பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, எஸ் டி இன்ஜினியரிங் மற்றும் ஏர் பஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வந்தோம். எங்களது சரக்கு விமானத்தில், 27 கண்டைனர்களை வைத்துக் கொள்ள முடியும். அத்துடன், 27 டன் அளவிலான பொருட்களை சுமந்து செல்ல முடியும்" என்று கூறியுள்ளார்.