விமான பயண சீட்டுகள் பெறும் நடவடிக்கைகளை எளிமையாக்குவதற்காக, புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம், ‘6Eskai’ என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிகளை எளிமையாக்கும் என கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவைகள் துறையில் பணி செய்யும் ஊழியர்களுக்கு ஏற்படும் 75% பணிச்சுமையை இது குறைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, விமான பயண சீட்டுகள் முன்பதிவு செய்யும் முறைகளை இது மிகவும் எளிமையாக நிகழ்த்துகிறது. மனிதர்கள் பேசும் சாதாரண மொழியில் உரையாடல் நிகழ்த்தி, இந்த சாட் பாட் விமான பயண சீட்டுகளை முன்பதிவு செய்கிறது. வாடிக்கையாளர்கள் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கும் வகையில், இதில் லட்சக்கணக்கான தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.