இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த ஆண்டே ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தலைநகரை மாற்றும் பணியில் இந்தோனேசிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், தலைநகர் மாற்றப்படும் முடிவை சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தலைநகர் மாற்ற நடவடிக்கையால் போர்னியோ தீவில் காடழிப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
புதிய தலைநகருக்கான மொத்த நிலப்பரப்பு சுமார் 256,143 ஹெக்டேர் (சுமார் 2,561 சதுர கிலோ மீட்டர்) என அளவிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாகப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் கடும் பாதிப்பை ஜகர்த்தா சந்தித்து வருகிறது. மக்கள்தொகை அதிகரிப்பால் வாகனப் பெருக்கமும், காற்று மாசும் ஜகர்த்தாவில் அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாகவே தலைநகரை மாற்றும் முடிவுக்கு இந்தோனேசியா வந்ததாக கூறப்படுகிறது.