இந்தோனேசியாவில் அரசுக்குச் சொந்தமான பிளமபாங்க் எண்ணெய் கிடங்கில், வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளிவந்துள்ளது.
மக்கள் நெருக்கடி மிகுந்த வடக்கு ஜாக்கர்தாவின் தனா மேரா பகுதியில் அமைந்துள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ, 2 மணி நேரத்தில் அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியதால் கோர விபத்து ஏற்பட்டது. விபத்து நேர்வதற்கு முன்னர், காற்றில் பெட்ரோல் வாசம் தீவிரமாக இருந்ததாகவும், இதனால் பொதுமக்கள் சிலருக்கு வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோல் வாசம் கசிந்ததை அடுத்து, சில நிமிடங்களில், அதிக ஒலியுடன் வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக எழுந்த கரும்புகை மண்டலத்தில் பொதுமக்கள் வெளியேறும் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது எனவும், கிட்டத்தட்ட 35 பேருக்கு, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேர் காணாமல் போனதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, அரசாங்கம் தகுந்த உதவிகள் வழங்கும் என்று இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.