இந்தோ-பசபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் போர் பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனக் கடல் பகுதியில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையில் இந்தோனேசியா கருடா ஷீல்ட் என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சி நடத்துகிறது. பின்னர் இதில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகள் இணைந்தனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுப்போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் இந்தோனேசியாவின் 2 லியோபர்ட் டாங்கிகள், ஆஸ்திரேலியாவின் 5 எம்.1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
ஆனால் இந்த பயிற்சியை தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீனா எதிர்கின்றது. அதோடு இல்லாமல் ராணுவ செல்வாக்கை பயன்படுத்தி நேட்டோவை போல் ஒரு இந்தோ-பசபிக் கூட்டணியை உருவாக்க அமெரிக்கா முயன்று வருவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்தோனேசிய ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ரோந்து பணியின் போது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கவே இந்த கூட்டுப்பயிற்சி என்றார்.














