மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் நிலையில், 2014-ல் தொடங்கப்பட்ட 'ஜன்தன்' திட்டத்தின் கீழ் இதுவரை 56 கோடியே 16 லட்சம் பேர் வங்கி கணக்குகளைத் திறந்துள்ளனர். இந்தக் கணக்குகளில் ரூ.2.67 லட்சம் கோடி இருப்பு உள்ளது.
சமூக வலைதளங்களில், செப்டம்பர் 30க்கு பிறகு கே.ஒய்.சி. விவரங்களை சேர்க்காதவர்களின் 'ஜன்தன்' கணக்குகள் செயல்படாது என்ற தகவல் பரவியது. இதனால் பலர் வங்கிகளில் ஆவணங்களுடன் கூடிய படையெடுப்பை தொடங்கினர். ஆனால் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் விளக்கம் அளித்து, இந்த தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளது. கே.ஒய்.சி. சேர்ப்பது கட்டாயம்தான், ஆனால் சேர்க்கப்படாவிட்டாலும் கணக்குகள் செயல்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.