இன்போசிஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் (IT Services) பிரிவின் தலைவராக ரவிக்குமார் செயல்பட்டு வந்தார். தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸ் நிறுவனம், செவ்வாய்க்கிழமை மாலையில் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குச்சந்தை பதிவீட்டு அறிக்கையில், நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரவிக்குமாரின் சேவைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அத்துடன், நிறுவனத்தின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு குறித்து பதிவு செய்துள்ளனர். அதே வேளையில், ரவிக்குமாரின் ராஜினாமாவுக்கான காரணம் குறித்து எந்த விவரமும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
திரு. எஸ். ரவிக்குமார், பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில், அணு ஆயுத விஞ்ஞானியாக தனது பணியைத் தொடங்கினார். அதன்பின்னர், 2002 ஆம் ஆண்டு, இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். நிறுவனத்தில் திறம்பட பணியாற்றி வந்த அவர், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவியில் இருந்த போது, இன்போசிஸ் நிறுவனம், உலகளாவிய தொழில் வளர்ச்சியை எட்டியது. அத்துடன், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம், நிறுவனம் தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.