இன்போசிஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 1.7% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 6106 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில், இது 6212 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நிறுவனத்தின் நிகர வருவாய் 0.4% உயர்ந்துள்ளது. மேலும், 2024 ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் வரம்பு 1.5 முதல் 2% ஆக திருத்தப்பட்டுள்ளது. இது, 1 முதல் 2.5% ஆக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பாரீக் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும். நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு லட்சம் ஊழியர்கள் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.














