இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு, கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள் அளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி சேவைகள் பிரிவில் இன்போசிஸ் பணியாற்ற உள்ளது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு கருவியின் வருகைக்குப் பின்னர், பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் களமிறங்கியுள்ளன. அந்த வகையில், ‘இன்போசிஸ் டோபாஸ்’ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு பிரிவு கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. தற்போது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த மிக முக்கிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது, இன்போசிஸ் நிறுவனத்தின் மற்ற போட்டி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுப்பதாக அமைந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 3% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.