இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனம் இன்போசிஸ் ஆகும். அண்மையில், இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நிறுவனம் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 15 - 16% உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் EBIT மார்ஜின் 150 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து, 21.5 சதவீதமாக உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. எனவே, சந்தை மதிப்பு அடிப்படையில், இந்தியாவின் நான்காவது பெரிய நிறுவனமாக இன்போசிஸ் வளர்ந்துள்ளது. முதலிடத்தில் ரிலையன்ஸ், இரண்டாம் இடத்தில் டிசிஎஸ், மூன்றாம் இடத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர அடிப்படையில், இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 23.4 சதவீதமாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சர்வதேச தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ, இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலையை 1800 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது. பிஓஎஃப்ஏ, இன்போசிஸ் பங்கு விலையை 1535 ஆக நிர்ணயித்தது. மேலும், இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1750 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கோடக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், 2024 ஆம் ஆண்டு வரையில் இன்போசிஸ் நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் இயங்கும் என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷேர்கான் மற்றும் மோதிலால் ஓஸ்வால் ஆகிய நிறுவனங்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பை உயர்த்தி பட்டியலிட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.