கடற்படை பயன்பாட்டுக்காக மும்பையில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
கடற்படை பயன்பாட்டுக்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே ஐஎன்எஸ் கல்வாரி, கந்தேரி, கரன்ஜ் மற்றும் வேலா ஆகிய 4 ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு வழங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் 5வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வகிர் கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் சேர்க்கப்படுவது அதன் போர் திறனுக்கு மேலும் ஊக்குவிப்பாக இருக்கும். இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ‘‘ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் தயாரித்ததன் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்தில் இன்னொரு படி முன்னேறியுள்ளோம்’’ என்றார்.














