இன்ஸ்டாகிராம் தற்போது வாட்ஸ்அப்பைப் போலவே லைவ் லொகேஷன் ஷேரிங் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது நிகழ் நேர இருப்பிடத்தை குறிப்பிட்ட நபர்களின் சாட் விண்டோவில் ஒரு மணி நேரம் வரை பகிர்ந்து கொள்ளலாம். இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இணைந்திருக்கவும், நெரிசலான இடங்களில் ஒருவரை ஒருவர் எளிதாகக் கண்டுபிடிக்கவும் உதவும். இந்த அம்சம் செயல்படும்போது அதை தெரிவிக்கும் ஒரு சிறப்பு குறியீடும் இருக்கும். மேலும், இந்த அம்சத்தின் கால அளவை வாட்ஸ்அப்பில் உள்ளது போல 8 மணி நேரமாக நீட்டிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
இது தவிர, பல புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் அரட்டைகளை இன்னும் சுவாரசியமாக்க 300-க்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்களை கொண்ட 17 புதிய ஸ்டிக்கர் பேக்குகள் வெளியாகியுள்ளது. இதோடு, நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கு தனிப்பட்ட புனைப்பெயர்களை வைக்கவும் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்டிக்கர்கள் மற்றும் புனைப்பெயர் அம்சங்கள் இந்தியாவில் ஏற்கனவே பயன்படுத்த கிடைக்கின்றன. ஆனால், லைவ் லொகேஷன் ஷேரிங் அம்சம் தற்போது சில நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சம் எப்போது இந்தியாவில் கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.