அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சனிக்கிழமை அன்று இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர இழப்பு 272.35 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை விற்பனை செய்வதால் இந்த இழப்பு நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, இதே காலாண்டில், நிறுவனம் 6360.05 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பிற அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் இழப்பை பதிவு செய்திருந்தன. அரசாங்கம், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தவில்லை. இதனால், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 1992.53 கோடி ரூபாய் இழப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பதிவு செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் காலாண்டில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளால் கிடைத்துள்ள வருவாய் 2.28 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் வருவாய் 1.69 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒரு வருடத்திற்கு முன்னர், 12301.42 கோடி ரூபாய் லாபத்தை நிறுவனம் பதிவு செய்திருந்தது. ஆனால், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 2264.88 கோடி ரூபாய் இழப்பை பதிவு செய்துள்ளது.