ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜியோ பிசினஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு இணைய சேவைகள் வழங்க உள்ளது. சுமார் 5 வருட காலத்திற்கு, இந்தியாவின் 7200 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் நிலையங்களில், SD-WAN இணைய சேவைகளை ஜியோ நிறுவனம் வழங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் இணைய சேவை மூலம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தானியங்கி வர்த்தகம் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்டணங்களை சரிபார்த்தல், தினசரி பெட்ரோல் விலை மாற்றம் உள்ளிட்ட சேவைகள் எளிதாக்கப்படும் என்று கருதப்படுகிறது. இது குறித்து பேசிய ஜியோ நிறுவனத்தின் உயரதிகாரி பிரதிக் பாஷினி “இணைய சேவைகள் வழங்கும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது 2000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் SD-WAN இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.