ஈரான் ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பஞ்ச்கூர் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ் அல் அட்லி பயங்கரவாத இயக்கம் மீது ஈரான் ராணுவம் கடந்த மாதம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமைதி நிலை நாட்டப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் ஈரான் ராணுவம் புகுந்து மீண்டும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரான் இன்டர்நேஷனல் நிறுவனம் கூறுகையில், ஈரான் ராணுவ படைகள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஜெயிஷ் அட்லி இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் மற்றும் சிலரை கொன்றுள்ளது. பயங்கரவாதிகளுடன் நடந்த ஆயுத மோதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் மற்றும் பாகிஸ்தான இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இயக்கம் கடந்த 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது ஈரான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் ஈரான் படைகளை குறிவைத்து அது தாக்குதல் நடத்துகிறது. எனவே அந்த இயக்கத்தை பயங்கரவாத குழுவாக ஈரான் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.