ஐஆர்சிடிசி பெயரில் போலியான ஆண்ட்ராய்டு செயலி உள்ளதாக ரயில்வே துறை எச்சரித்துள்ளது. irctcconnect.apk என்ற பெயரில் இயங்கும் செயலி போலியானது எனவும், இந்த செயலியால் கைபேசிகளுக்கு பாதிப்பு நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட செயலி, வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளுடன் பகிரும் வகையில் அமைந்துள்ளதாகவும், மற்றொரு போலி இணையதளமான https://irctc.creditmobile.site உடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளங்கள், மிகப்பெரிய சைபர் மோசடி தளங்களாக சொல்லப்பட்டுள்ளன. இவை வாடிக்கையாளர்களின் வங்கி தரவுகளை அறிந்து, பண மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட் பேங்கிங் விவரங்கள், யுபிஐ தரவுகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆகியவற்றை பதிவிடும் மக்கள் இந்த கும்பலின் வலைக்குள் விழுவதாக ரயில்வே துறை எச்சரித்துள்ளது.
ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ செயலியாக IRCTC Rail Connect அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற போலி செயலிகளை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.














