சிரியாவில், துருக்கி நாட்டின் ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல் குரேஷி கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. துருக்கியின் அதிபர் எர்டோகன் இந்த தகவலை அறிவித்துள்ளார். சனிக்கிழமை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான துருக்கியின் போர் தொடரும் எனக் கூறியுள்ளார். ஆனால், எர்டோகன் கூறியுள்ள இந்த தகவலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவுடன் நீண்ட எல்லை பகுதியை துருக்கி பகிர்ந்து வருகிறது. அங்கு, ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் குர்துப் பிரிவினைவாதிகளை எதிர்த்து துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், நடத்தப்பட்ட தாக்குதலில் ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.














