ரபா நகர் மீது தரைவழி தாக்குதலை நடத்த பிரதமர் நேதன்யாகு தனது ராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக காசா போர் நடைபெற்று வருகிறது. இதில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் உள்ளனர். இந்த நகரம் எகிப்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் தற்போது சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ரபா நகர் மீது தீவிர தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. அங்கு அமைப்பினர் பதுங்கி உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஆனால் மக்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் தாக்குதல் நடத்தினால் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்று ஐநா மற்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதனை இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். ஹமாசை அழிப்பதே முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார். அதே சமயத்தில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது ராணுவத்திற்கு தரைவழி தாக்குதலை நடத்த பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து நகருக்குள் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். அதோடு அந்நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மக்கள் வீடுகளை இழந்து தண்ணீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இது மேலும் துன்பத்தை அளிப்பதாக உள்ளது. தரைவழி தாக்குதலுடன் வான்வழி தாக்குதலும் நடக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஷாமி சுகுரி கூறியதாவது, காசாவில் இனப்படுகொலை நடத்த இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று கூறியுள்ளார்.














