இஸ்ரேல் போர் தீவிரமடைவதையடுத்து, ஐ.நா. பொதுசபையின் அவசர கூட்டம் அக்டோபர் 26ல் நடைபெறுகிறது.
ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பு அமைப்புகளில் ஐக்கிய நாடுகள் பொது சபையும் ஒன்று. உலக நாடுகளுக்கு இடையே பிரச்சனை எழும்போது ஐநா சபையின் பிரதிநிதியாக இந்த அமைப்பு செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த அமைப்பின் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் சந்திப்பு நடைபெறும்.உலக நாடுகளுக்கு இடையே ஏதேனும் நெருக்கடி நிலை ஏற்பட்டால், இந்த அமைப்பு உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து அவசரக் கூட்டம் கூட்டும். அந்த வகையில் தற்போது இஸ்ரேல் போர் தீவிரம் அடைந்துள்ளதால் ஐக்கிய நாடுகள் பொது சபையின் பத்தாவது அவசர சந்திப்பு அக்டோபர் 26 அன்று நடைபெறும் என்று அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், உறுப்பினர் நாடுகள் அவசர சந்திப்பு நிகழ்த்த வேண்டும் என்று ஐநா பொது சபைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதனையடுத்து அவசர கூட்டம் வரும் 26 அன்று நடத்தப்படும் என்றார்.உலக சூழ்நிலைக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் அவசர கூட்டம் கூட்ட ஐநா பொது சபைக்கு அதிகாரம் உள்ளது. முன்னதாக 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்றதையடுத்து அவசர கூட்டம் கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.