காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் குறித்த ஆதாரங்களை தேட பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் குறித்த ஆதாரங்களை தேட இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது. இந்த பணி நிறைவடைய பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு கீழே சுரங்க கட்டமைப்புகள் உருவாக்கி அதில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வந்ததாக முன்னதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி இருந்தது. இந்நிலையில், காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் அல்-ஷிஃபா மருத்துவமனையை 5 நாளாக முற்றுகையிட்டு இருந்தது. இதனால் அந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் முடங்கிப் போயிருந்தது. போதிய சிகிச்சை வசதிகள் இல்லாததால் பலர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் அதிரடியாக நுழைந்தது. அங்கு ஹமாஸ் செயல்பாடுகள் குறித்த ஆதாரங்களை தேடி வருகிறது. ஹமாஸ் பயன்படுத்ததாக கூறப்படும் மடிக்கணினி மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இருந்த போதும் ஹமாஸ் அமைப்பு இதனை மறுத்துள்ளது. மடிக்கணினியில் பிணை கைதிகளின் புகைப்படம் இருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்த ஹமாஸ் அமைப்பினர் இந்த மருத்துவமனையின் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்துவதற்காக இஸ்ரேல் இப்படி பொய் கூறுகிறது என்று கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்க கட்டமைப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களை கண்டறிய பல வாரங்களாகும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.














