காசாவில் மனிதாபிமான உதவிகள் கிடைக்க எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
காசா போரில் இதுவரை 32,000- க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் காசா மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல சமூக நிறுவனங்கள் உதவி செய்கின்றனர். இருந்தபோதிலும் காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் இருந்தபடியே உள்ளது. இதற்கு காரணம் பெரும்பாலான எல்லைகளை இஸ்ரேல் அடைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் காசா மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்க பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதனையடுத்து எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த எரேஸ் எல்லையானது இஸ்ரேல், காசா முனை இடையே உள்ளது. இந்த எல்லை வழியாக மக்கள் காசா முனையில் இருந்து இஸ்ரேலுக்கு பயணிக்க முடியும். கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதிலிருந்து இந்த எல்லையை இஸ்ரேல் மூடி வைத்திருந்தது. இந்த எல்லையை கடக்கவும், இந்த எல்லையின் வான்வழியை பயன்படுத்தவும் மக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்திருந்தது. தற்போது இந்த எல்லை திறந்து விடப்படுகிறது. அதே போல் அஷ்டோத் துறைமுகத்தையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.