இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்த நாடு தாக்கப்படும் என்று இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே நடக்கும் போர் பிராந்திய போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகத்தில் சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 12 பேர் பலியாகினர். அவர்களில் இரண்டு பேர் இஸ்லாமிய படை தளபதிகள் ஆவர். இந்த தாக்குதல் ஈரானில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா கமேனி நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களில் தாக்குதல் நடத்தினாலும் அது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானதாகும். எனவே அதற்காக இஸ்ரேல் அரசை தண்டித்தே தீருவோம் என்றார். இதற்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்ட்ஸ் பதில் அளித்துள்ளார். அதில் ஈரான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். நாங்கள் அவர்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என்று கூறினார். இஸ்ரேல் நாடு உருவாவதை ஈரான் எப்போதும் ஏற்கவில்லை. உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை அகற்ற வேண்டும் என்று கூறி அதனை அங்கீகரிக்க மறுக்கிறது. அதோடு இஸ்ரேலுக்கு எதிராக போரிடும் ஆயுத குழுக்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.
மேலும் ஈரான் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா குழுவினர் மற்றும் ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மறைமுக மோதல் நடைபெற்று வருகிறது. தற்போது ஈரான் தூதராக தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.














