இஸ்ரேல் நாட்டில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர் எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகளை மீறி, திங்கள் கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், இனி ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுகளில் இனிமேல் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. குறிப்பாக, பணி நியமனங்கள் சார்ந்து அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகளை சீராய்வு செய்வதற்கு நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இஸ்ரேல் வரலாற்றில் மிகப்பெரிய போராட்டம் ஏற்பட்டுள்ளது..
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 உறுப்பினர்கள். அதில் 64 எம்பிக்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், இந்த வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பில் ஈடுபட்ட காரணத்தால், மசோதாவிற்கு எதிராக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அதன்படி, பெரும்பான்மையுடன் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














