இஸ்ரோ தரப்பில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி.சி ராக்கெட் இன்சாட் 3 டி.எஸ் என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 12 ஏவுதல்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதனை தொடர்ந்து வானிலை முன்னறிவிப்பு தகவல்கள் அடங்கிய காலநிலை தரவுகளை அறிந்து கொள்வதற்காக இன்சாட் 3டிஎஸ் என்ற செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஆனது தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது. இந்த இன்சாட் 3D மற்றும் 3D செயற்கைக்கோள்கள் காலநிலை தரவுகளை தெரிந்து கொள்வதற்காக தற்போதுள்ள சுற்றுப்பாதையில் தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இது வானிலை ஆய்வுகளை வழங்குவதுடன் வானிலை முன்னறிவிப்பு திறன்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் தகவல் தொடர்பு அம்சங்களுடன் நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையிலும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தவிர பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளை வழங்குவதுடன்,முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.