வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அமைப்பு சுக்ரயான் என்ற திட்டத்தை முன்மொழிந்திருந்தது. இதற்கான முறையான ஒப்புதல் இந்திய அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என்பதால் 2024 ஆம் ஆண்டு வாக்கில் திட்டமிடப்பட்டிருந்த இந்த சுக்ரயான் திட்டம், 2031 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இஸ்ரோ அமைப்பின் பேராசிரியர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
சுக்ரயான் திட்டம், முதன் முதலாக கடந்த 2012 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர், 5 ஆண்டுகள் கழித்து பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, இஸ்ரோ இந்த தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அதில், சுக்ரயான் திட்டத்திற்கு 19 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சாதகமான சூழல் நிலவும் என தெரிவித்துள்ளது. எனவே, 2024 ஆம் ஆண்டில் திட்டம் நிறைவடையவில்லை என்றால், 2026 ஆம் ஆண்டு அல்லது 2028 ஆம் ஆண்டில் அதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒவ்வொரு 8 வருடங்களுக்கு ஒருமுறை, திட்டத்திற்கு மிகவும் சாதகமான சூழல் ஏற்படுவதாக ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். எனவே, 2031 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கு மிகவும் சாதகமான சூழல் ஏற்படும் என்றும், அப்போது இந்த திட்டத்திற்கான எரிபொருள் தேவை வெகுவாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.














