இஸ்ரோவின் RISAT-2 செயற்கைக்கோள், தனது கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் விழுந்துள்ளது. சுமார் 13 வருடங்களுக்கு முன்பு, கடந்த 2009 ஆம் ஆண்டு, பிஎஸ்எல்வி சி12 ராக்கெட் மூலம் RISAT-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. நான்கு வருடங்களுக்கு மட்டுமே இந்த செயற்கைக்கோள் செயல்பாட்டில் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், முறையான சுற்றுவட்ட பாதையை மேற்கொண்டதால், குறைவான எரிபொருள் பயன்பாடு நேரிட்டது. இதனால், தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு இந்த செயற்கைக்கோள் பணி செய்தது. இந்நிலையில், அதன் எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்ததால், அண்மையில் தனது கட்டுப்பாட்டை இழந்தது.
இந்த செயற்கைக்கோள், இந்தியப் பெருங்கடலில் உள்ள ஜாக்கார்டா பகுதியில் விழும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, ஜாக்கார்டா பகுதியில் பூமியின் வளிமண்டலத்துக்குள் விழுந்தது. இந்த செயற்கைக்கோள், 300 கிலோ எடை உள்ளதாகும். எனினும், செயற்கைக்கோளில் உள்ள எரிபொருள் முற்றிலுமாக வற்றியதால், பூமியில் விழும் போது, எந்தவித குண்டு வெடிப்புகளும் நேரவில்லை. அத்துடன், வளிமண்டலத்துக்குள் நுழைந்தவுடன், விஞ்ஞான கோட்பாடுகளின் படி, அது முற்றிலுமாக எரிந்து விட்டது. அதனால் செயற்கைக்கோளின் பாகங்கள் பூமியின் நிலப் பகுதியை வந்தடையவில்லை. இந்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.