கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தொழிலாளர் நலத் துறைச் செயலர் முகமது நசிமுதீன் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற, 60 வயதுக்கு உட்பட்ட பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம், முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியுதவி 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுவிக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிதியுதவி தேவைப்படும் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பதிவு அட்டையை இணைத்து, தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அரசு மருத்துவரிடம் இருந்து மருத்துவச் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், தீவிர நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வீதம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.














