ஆதார் எண் இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 3 கோடி மின் இணைப்பு உள்ள நிலையில் வீடுகளுக்கான இணைப்புகள் மட்டும் 2 கோடியே 33 லட்சம் இருக்கிறது. இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள் 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி வரை ஆதாரை இணைக்க ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில் 65 சதவீதம் பேர் தான் ஆதாரை இணைத்திருந்தனர். இதனால் ஜனவரி 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அப்படி இருந்தும் 2 கோடியே 47 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்ததால் வருகிற 15-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், 3 கட்டமாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். இன்னும் 15-ந்தேதி வரை அவகாசம் உள்ளது. இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்தார். ஆதாரை இணைக்காவிட்டால் 15-ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.