யாழ்ப்பாணம் - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஏப்.29-ல் தொடங்கும் என்று இலங்கையின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் வடமாகாணத்தின் வளர்ச்சி பணிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 2018-ல் ரூ.287 கோடி நிதியுதவியை அளித்தது. இந்த நிதியுதவி மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கும், சரக்குக் கப்பல்களைக் கையாளவும், பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கொழும்பில் இலங்கை கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில், யாழ்ப்பாணம்-காரைக்கால் பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் காங்கேசன் துறையிலிருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை ஏப். 29-ல் தொடங்கப்படும் என்று அறிவித்தது. முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.