பிரபல கார் உற்பத்தியாளரான ஜாகுவார், தனது புதிய எலக்ட்ரிக் கான்செப்ட் கார் டைப் 00 ஐ அறிமுகம் செய்துள்ளது. டிசம்பர் 3, 2024 அன்று மியாமி ஆர்ட் வீக்கில் வெளியிடப்பட்ட இந்த கார், ஜாகுவாரின் எதிர்கால வடிவமைப்பு திசையை உணர்த்துகிறது. நீண்ட பானட், ஃபாஸ்ட்பேக் உடல் வடிவம், 23-இன்ச் அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் இந்த காரை மிகவும் பிரத்யேகமாக காட்டுகின்றன. மியாமி பிங்க் மற்றும் லண்டன் ப்ளூ என இரு வண்ணங்களில் வெளியிடப்பட்ட இந்த கார், ஆர்ட் டெகோ கலை மற்றும் பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் கலவையை வெளிப்படுத்துகிறது. பட்டாம்பூச்சி போல விரியும் கதவுகள், பனோரமிக் கூரை போன்ற பல பிரீமியம் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஜாகுவார் நிறுவனம், 2025 இன் பிற்பகுதியில் நான்கு-கதவு ஜிடி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் பின்னர், 2026 ஆம் ஆண்டுக்குள் மேலும் இரண்டு மின்சார மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அனைத்து மாடல்களும் ஜாகுவார் எலக்ட்ரிக் ஆர்க்கிடெக்சரில் (JEA) உருவாக்கப்படும். இந்த கார்கள் ஒரு சார்ஜில் 770 கிமீ வரை பயணிக்கக் கூடிய திறன் கொண்டவை. மேலும், 15 நிமிடங்களில் 321 கிமீ தூரம் பயணிக்கத் தேவையான அளவு சார்ஜ் செய்யப்படலாம்.