கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது புகுஷிமா மாகாணத்தில் உள்ள அணு உலை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த அணு உலையில், தற்போது, ஒரு மில்லியன் டன் அளவிற்கு மேலான அணுக் கழிவு நீர் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் அரசு, இந்த அணுக்கழிவு தண்ணீரை பசிபிக் பெருங்கடலில் கலக்க திட்டமிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்கு, உள்ளூர் மக்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அணுக்கழிவு தண்ணீரை கடலில் கலப்பதால், மீன்களுக்கு மிகவும் பாதிப்பு நேரும் என்று கூறப்படுகிறது. மேலும், ‘மீன்பிடி தொழில் மற்றும் கடல் உணவு தொழில்கள் மிகவும் பாதிக்கப்படும்; இதனை முக்கிய வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும்’ என்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்நாட்டு அளவில் முன்வைக்கப்படுகின்றன.
ஜப்பானின் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது, ‘ஒரு தலைப் பட்சமான முடிவு’ என ஜப்பானை விமர்சித்து வருகின்றன. அதே வேளையில், ஐ நா சபையால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் துறை அதிகாரிகள், ஜப்பான் அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, ஜப்பானுக்கு எதிராக பெரும்பாலான தரப்புகள் களம் இறங்கி உள்ளதால், போராட்டச் சூழல் ஏற்பட்டுள்ளது.