நடப்பு 2023 ஆம் ஆண்டு, மனித வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக கூறப்பட்டுள்ளது. ஜப்பானில், 125 ஆண்டுகளில் நிலவும் வெப்பமான செப்டம்பர் மாதமாக இது அமைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.ஜப்பானில், கடந்த செப்டம்பர் மாதத்தில், சராசரி வெப்பநிலையை விட 2.66 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. அந்நாட்டு வானிலை மையம் இதனை உறுதி செய்துள்ளது. மேலும், வெப்பநிலை கணக்கிடுதல் முறை தொடங்கப்பட்ட காலத்திற்கு பிறகு, இதுவே வெப்பமான செப்டம்பர் மாதமாக உள்ளது என தெரிவித்துள்ளது. ஜப்பான் தவிர, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் தங்கள் நாடுகளில் செப்டம்பர் மாதம் வெப்பமானதாக இருந்ததாக அறிவித்துள்ளன. பிரான்சில், செப்டம்பர் மாத சராசரி வெப்பநிலை 21.5 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இது 1991 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பதிவான வெப்பநிலையை விட 3.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் என கூறப்பட்டுள்ளது. கடந்த 1884 ஆம் ஆண்டுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் வெப்பமானதாக அமைந்துள்ளதாக பிரிட்டன் நாடு தெரிவித்துள்ளது.