ஜப்பானில் 2024ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு வீதம் மிக மோசமாக குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் எதிர்கால பண்பாட்டுத் தாங்குதன்மையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
2024-ல் ஜப்பானில் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 6,86,061 ஆகும். இது கடந்த 2023 ஆண்டை விட 5.7% குறைவாகும். 1899க்குப் பிறகு இது முதல்முறையாக குழந்தை பிறப்பு எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் குழந்தை பிறப்பு 27 லட்சம் இருந்த நிலையில், தற்போது அதன் நான்கில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் தொகை குறைவு, வயது மூப்பு அதிகரிப்பு போன்ற சிக்கல்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் பேரழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், திருமணம் மற்றும் பெற்றோராக மாறும் வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் குடும்ப அனுகூலம் உள்ளிட்ட மாற்றங்களை அரசு உறுதி செய்துள்ளது. தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் இது போன்ற பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.