இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்காக உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான குவால்கம் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து பணியாற்ற உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்காக உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான குவால்கம் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து பணியாற்ற உள்ளதை அறிவித்தார். குவால்கம் நிறுவனம், ஜியோ நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி பேசிய அவர், ஜியோ மற்றும் குவால்கம் நிறுவனங்களின் கூட்டமைப்பில் உருவாகும் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் நிலைநாட்டிய பிறகு, உலகின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகக் கூறினார். இது குறித்து குவால்கம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ ஆமன் கூறுகையில், "கடந்த வருடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்த பொழுது, அதிநவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவைகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கூறினார். அந்த வகையில், இந்தியா தனது 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில், ஜியோ நிறுவனத்துடன் இணைந்து, அதற்காக நாங்கள் பணியாற்ற உள்ளோம்" என்று கூறினார். வரும் தீபாவளிக்குள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும் என்றும், 2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த தொழில்நுட்பம் கொண்டு சேர்க்கப்படும் என்றும், முகேஷ் அம்பானி இந்த கூட்டத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.