காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்திக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முஃப்தியின் பாஸ்போர்ட் கடந்த 2019-ம் ஆண்டு காலாவதியானது. இதையடுத்து, பாஸ்போர்ட் புதுப்பிக்க அவர் விண்ணப்பித்தார். அவரது தாயும் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்கு எதிரான அறிக்கை ஒன்றை காஷ்மீர் போலீஸார் தாக்கல் செய்தனர். அதன் காரணமாக இவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டது.
இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மெகபூபா வழக்கு தொடர்ந்தார். இந்த மனு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மெகபூபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரது வேண்டுகோளை மறுபரிசீலனை செய்யுமாறு, ஜம்முகாஷ்மீர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம்.சிங், மெகபூபாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். அதன்படி டெல்லி நீதிமன்றத்தில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு, மெகபூபா முஃப்திக்கு, 2023 ஜூன் 1 முதல் 2033 மே 31 வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.